"இஸ்ரேலுக்கு தமிழ்நாடு எந்தவிதமான ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்ககூடாது" - செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இஸ்ரேல் அரசு தொடர்ந்து நிகழ்த்தி வரும் மனிதாபிமானமற்ற கொடூரமான வான்வழி உள்ளிட்ட பல்வேறு முனைகளில் தாக்குதலுக்கு பாலஸ்தீன மக்கள் இரையாகி வருவது அனைவரது மனதையும் பதற வைக்கிறது. இத்தாக்குதலினால் ஆயிரக்கணக்கான மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்படுவது குறித்து இஸ்ரேல் கவலைப்படுவதாக தெரியவில்லை. பாலஸ்தீன மக்களுக்காக மறைந்த அதிபர் யாசர் அராபத்துக்கு ஆதரவாக மறைந்த பிரதமர் இந்திரா காந்தி உள்ளிட்டவர்கள் ஆதரவு வழங்கி வந்தார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.
இந்நிலையில் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு நடத்தி வரும் மனித நாகரீகமற்ற இன அழிப்பு நடவடிக்கைகளினால் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் கூட தப்பவில்லை. இத்தகைய கொடூரமான தாக்குதல் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணையம் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் பயங்கரவாத இன அழிப்பு போர் என்று குற்றம்சாட்டியிருக்கிறது. சமீபத்தில் ஐ.நா.சபையில் உரையாற்ற வந்த இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு பேசத் தொடங்கியதும் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்ததால் அரங்கமே வெறிச்சோடியது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளை தவிர உலகநாடுகள் அனைத்தும் இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தாலும் இஸ்ரேல் தனது போக்கை மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை.
இந்நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை சென்னையில் உலகளாவிய வான்வழி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் மிகப்பெரிய வணிக நிகழ்வு நடைபெறப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிகழ்வில் இஸ்ரேல் அரசுடன் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இத்தகைய நெருக்கடியான பின்னணியில் இஸ்ரேல் அரசுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இணைந்து செயல்படும் எந்த நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசு வணிக விளம்பரம் வழங்குவதை தவிர்க்க வேண்டும். இஸ்ரேல் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது காந்தி, நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி உள்ளிட்ட தலைவர்களின் வழிகாட்டுதலுக்கும், வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் நேர் எதிரானதாகும்.
உலகத்தில் எந்த நாட்டிலாவது ஜனநாயகத்திற்கு விரோதமாக சர்வாதிகார அடக்குமுறைகள் நிகழ்ந்தால் அதை எதிர்த்து போராடுகிற நாடுகளுக்கு இந்தியா எப்பொழுதுமே ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறது. அந்த வழியில் பாலஸ்தீன மக்களின் துயரத்திலும் தமிழக மக்கள் பங்கேற்கிறார்கள் என்பதை உறுதி செய்கிற வகையில் இஸ்ரேல் நிறுவனங்கள் நடத்தும் வணிக நிகழ்வுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பையோ, ஆதரவையோ வழங்குவதை தவிர்க்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே, அவர் தனது பதிவில் ‘காசா மூச்சு திணறுகிறது, உலகம் பாராமுகமாக இருக்கக் கூடாது” என்று பதிவிட்டதன் அடிப்படையில் இந்நிகழ்வை தமிழ்நாடு அரசு புறக்கணிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.