"இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழகம் விளங்க வேண்டும்" - விசிக தலைவர் திருமாவளவன்!
அமெரிக்க வரி விதிப்புக்கு நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் ரயில் நிலையம் முன்பு திமுக எம்.பி. ஆ.ராசா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செந்தில் பாலாஜி, திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு, விசிக தலைவர் திருமாவளவன், எம்.பி சுப்பராயன், சு.வெங்கடேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா,மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது அபுபக்கர், மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் தங்கவேல், தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், ஆதித்தமிழர் பேரவை அதியமான் உள்ளிட்டோர் மற்றும் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், "அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆனால் இது மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக இருந்திருக்க வேண்டும். தனது நண்பர்களுக்காக வெளியுறவு கொள்கை அமைத்துள்ளார். மோடியின் பினாமிகள் அம்பானி அதானி, நம் மீது அபராதம் விதிப்பதற்கு டிரம்ப் யார். மோடிக்கு தண்டனை என்றால் இந்திய மக்களுக்கும் அது தண்டனை. உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்துகிறது.
அதற்கு பொருளாதார உதவி செய்யும் வகையில் வர்த்தகம் நடைபெறுகிறது அதனை நிறுத்து என்கிறது அமெரிக்கா. அம்பானி ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறார். இந்த ஒப்பந்தத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசி முடிக்கிறார். அரசு வணிகம் தவிர்த்து தனியாருக்கு வாங்கி தருகிறது.
கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. இந்த லாபம் முழுவதும் அம்பானிக்கு சென்று சேர்கிறது. அம்பானியும் அதானியும் மோடியின் பினாமிகள். பல காரணங்கள் இருந்தாலும் இந்த வர்த்தகம் காரணமாகவே வரி விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நம் நாட்டு பொருள் அமெரிக்காவில் கூடுதலாக இருக்கும் மற்ற நாட்டு தயாரிப்புகள் விலை குறைவாக இருக்கும் இதனால் நம் பொருட்கள் விற்பனை ஆகாது.
வெறும் ஜவுளி மட்டும் அல்ல இறால் ஏற்றுமதி, நவரத்தின கற்கள் என அனைத்து தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிம்பிள் சொல்யூசன் அதானியை அழைத்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த சொல்ல வேண்டும். இந்த வரி விதிப்பால் பெரு முதலாளிகள் பாதிக்கப்பட போவதில்லை. ஏழை எளிய மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாம் பாதிக்கப்படுகிறோம். சனாதன அரசியலை திணிக்கிறார்கள் மத வெறியை தூண்டுகிறார்கள், சாதி பெருமை பேசிய சண்டைதான் போட முடியும்.
அதானி அம்பானி ஆக முடியாது. ஜெய் ஸ்ரீராம் சொல், சாதி பாகுபாடு கொள்கை, பெருமுதலாளி கொள்கை என பாஜக செயல்பட்டு வருகிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் பாதுகாப்பு அரண். திமுக வெறுப்பை உமிழ்கிறது. இதனை நாம் விட முடியாது. அவரோடு கை கோர்த்து நிற்பது தான் நமது கடமை. இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழகம் விளங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.