தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு - தென் மண்டல வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலூரில் அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நவ.19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இன்று 9 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருந்த புயல் சின்னம் இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை ஒடிஸா கடற்கரைக்கு நகரும் எனவும், இது புயலாக மாறுமா என்பது நாளை தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக டிஜிபி அலுவலகம் அருகே 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் 36 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், கடலூர் மாவட்டத்திலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுவான மிதமான மழை பெய்ய கூடும். மேலும் ஒரு சில பகுதிகளில் சற்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.” என தெரிவித்தார்.