Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை ரேஸ் கிளப் இடத்தில் புதிய பசுமை பூங்கா - #Tamilnadu அரசு அரசாணை வெளியீடு!

09:18 PM Sep 22, 2024 IST | Web Editor
Advertisement

கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கிட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசு இதில் வெளியிட்டுள்ளதாவது..

"சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு வெங்கடாபுரம், அடையாறு மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் 160.86 ஏக்கர் நிலம் 1.4.1945 ஆம் தேதி முதல் 99 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. அரசிடமிருந்து கிண்டி ரேஸ் கிளப் நிருவாகத்திற்கு வழங்கப்பட்ட இந்த நிலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படுவதால் தமிழ்நாடு அரசு குத்தகையை ரத்து செய்து, இந்த நிலத்தினை மீளப்பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களின் இதர பயன்பாட்டிற்காக உருவாக்கம் செய்யப்படவுள்ளது.

கிண்டியில் நிலக் குத்தகை ரத்து செய்யப்பட்டு அரசு சுவாதீனம் செய்யப்பட்ட நிலத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் அமைப்பதற்காக, அரசுப் புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இருக்கும் ரூபாய் 4832 கோடி மதிப்பிலான 118 ஏக்கர் நிலத்தைத் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் நிலமாற்ற கோரிக்கையினை ஏற்று, அத்துறைக்கு நிலமாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகரம் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 86.9 லட்சம் மக்கள்தொகை கொண்டதாகவும், சென்னையில் ஒரு தனி மனிதருக்கான பசுமை நிலப் பகுதி (Per capita green cover) 1.03 சதுர மீட்டராகவும் உள்ளது. மேலும் சென்னைப் பெருநகரின் பசுமை வெளியானது, வனப்பகுதி, பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், திறந்த வெளித்திடல்கள் என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக சென்னையின் பரப்பில் வெறும் 6.7 சதவீதமாகத் தான் உள்ளது. இது பிற இந்திய மாநகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும்.

சென்னையின் பசுமைப் பகுதியை அதிகரிக்க வேண்டிய தேவையின் அடிப்படையிலும், சென்னை நகரமயமாக்குதலால், மக்கள் தொகை அடர்த்தி மற்றும் மக்கள் தொகை பெருகிவரும் சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பூங்காக்கள் மற்றும் பசுமைவெளிகளை உருவாக்க வேண்டியது அத்தியாவசியமாகியுள்ளது. சென்னை வாழ் மக்கள் தங்கள் உடல்நலனிற்காகவும், உடற்பயிற்சிக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் போதுமான பொது இடங்களை உருவாக்க வேண்டிய நோக்கத்துடன், நடைப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள பசுமையான சூழலைக் கொண்ட பூங்காக்கள் அவசியம் ஆகும்.

இதையும் படியுங்கள் : SrilankaElection | இலங்கை அதிபராகிறார் அனுரா குமார திசாநாயக!

இதுவரை பூங்காக்கள் அமைக்கப்படாத இடங்களில் புதிய பூங்காக்களை உருவாக்க வேண்டியுள்ளது. சென்னை நகரில் ஒரு பெரிய அளவிலான பூங்காவினை உருவாக்குவது சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும், பொது சுகாதாரத்தையும் மேம்படுத்துகிறது. மேலும், சென்னை நகரத்தில் வசிப்பவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்கு ஏராளமான நன்மைகளை உருவாக்கிடவும், பசுமையான இடங்களை உருவாக்கி, பொதுப் பூங்காக்களைப் பராமரிப்பதன் மூலம் எதிர்காலச் சந்ததியினரை பாதுகாப்பதிலும் அரசின் முக்கியப் பங்கு உள்ளது.

பூங்காக்கள் மக்களின் உடல், மன நல ஆரோக்கியத்துக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கின்றன:

1.மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் ஆகியவற்றைக் குறைத்து மனதுக்கு அமைதியைத் தருபவை பூங்காக்கள்.

2.உடல்பயிற்சிகளை ஊக்குவிக்கவும், அமர்ந்த நிலையிலேயே அதிக நேரத்தைச் செலவிடும் வாழ்வியல் சூழலில் ஆரோக்கியம் பேணவும் பூங்காக்கள் கைகொடுக்கும்.

3.சிறார்கள் ஓடியாடி விளையாடுவதற்குப் போதுமான இட வசதியை அளிக்கும்.

4.சுத்தமான காற்றைத் தரும், வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும், ஆரோக்கியமான சமுதாயம் அமைந்திட உதவும்.

5.நகரத்தின் வெப்பமான சூழலைத் தணிக்கும் மற்றும் வெள்ளப் பாதிப்பினை குறைக்கும்.

6.மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னையில், உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான சுத்தமான காற்றை வழங்கும் பூங்காக்கள் மக்கள் ஒன்று கூடவும், அவர்களின் உடல், மன நல ஆரோக்கியத்தைப் பேணவும், அத்துடன் சுற்றுச்சூழலைச் சீராகப் பராமரிக்கவும் உதவும்.

மாநகரத்தின் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஈடுகொடுத்திடும் வகையில் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் பூங்கா ஒன்றினை சென்னையின் மத்திய பகுதியான கிண்டியில் நிறுவுதல் மிக அவசியமானது. இங்கு அமைக்கப்படவுள்ள பூங்காவானது, மக்களது மன மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும், ஓய்வுக்கும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மெருகேற்றுவதற்கும் வழிவகுக்கும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சென்னையின் சுற்றுச்சூழலைப் பேணும் வகையில் ஏற்கனவே தனியார் அமைப்புகளிடம் இருந்த அரசு நிலங்களை மீட்டு தோட்டக்கலைத் துறையின் மூலம் சென்னை, கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவும், நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஒரு பூங்காவும் உருவாக்கப்பட்டு வருகிறது. அதேபோல், தற்போது சென்னை, கிண்டியில் மிகப் பெரிய பரப்பளவில் உருவாக்கப்பட உள்ள இந்த பூங்கா, பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக அமையும்"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
green spaceHorticulture Departmentnews7TamilUpdatesParkpublic facilitiestamil nadu
Advertisement
Next Article