கேலோ இந்தியா கபடி போட்டி - தமிழ்நாடு அணி அரை இறுதி சுற்றுக்கு தேர்வு!
ஆறாவது கேலோ இந்திய போட்டிகளில், தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணி அரை இறுதி சுற்றுக்கு தேர்வாகி உள்ளது.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம்
ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்
நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், நேரு உள் விளையாட்டு அரங்கில் கபடி விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான பெண்கள் பிரிவில் 11 வது போட்டியில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா அணியை 9 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 41 புள்ளிகள் உடன் வெற்றி பெற்றது. மகாராஷ்டிரா அணி 32 புள்ளிகள் பெற்று தோல்வியை தழுவியது.
இதனைத்தொடர்ந்து, ஆண்களுக்கான பிரிவில் தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு, டெல்லியை மூன்று புள்ளிகளில் வீழ்த்தி வெற்றிப் பெற்றது. டெல்லி அணி 36 புள்ளிகளைப் பெற்றது. இதையடுத்து, தமிழ்நாடு ஆண், பெண் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளன.