சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கிய யூடியூபர் #Irfan | தமிழ்நாடு மருத்துவக் குழுவினரிடம் விசாரணை!
யூடியூபர் இர்பான் மனைவியின் பிரசவத்தில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், மருத்துவ குழுவினரிடம் தமிழ்நாடு மருத்துவ குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பிரபல யூடியூபர் இர்ஃபான் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது மனைவியின் பிரசவ வீடியோவை வெளியிட்டு, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இர்ஃபானின் மனைவிக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, அதில் குழந்தையின் முகத்தை முதல்முறையாக காட்டினார்.
இதனைத்தொடர்ந்து தன் யூடியூப் பக்கத்தில் மனைவியின் பிரசவ வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் குழந்தையின் தொப்புள் கொடியை, இர்ஃபானே வெட்டுகிறார். இது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : India - #China இடையே உடன்பாடு | கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் மீண்டும் ரோந்து!
இதுகுறித்து விளக்கம் கேட்டு, ஊரக நலப்பணி துறை இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் யூடியூப் சேனலில் இருந்து அந்த வீடியோவை நீக்க வேண்டும் என மருத்துவத்துறை சார்பாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மருத்துவத்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், தொப்புள் கொடி வீடியோவை தனது யூட்யூபில் இருந்து இர்பான் நீக்கியுள்ளார். இந்த வீடியோ நீக்கப்படுவதற்கு முன்பு வரை சுமார் 16 லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மருத்துவம் பார்த்த சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ரெயின்போ சில்ட்ரன்ஸ் மருத்துவமனையில் தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவ குழுவினரிடம் தமிழ்நாடு மருத்துவ குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.