3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!
தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த இரண்டு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் 17-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு 21-ம் தேதி நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பதில் அளித்தனர்.
அதன் பிறகு கடந்த 24ம் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கைள் மீது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த 28ம் தேதி கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள், வனம், கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானியக்கோரிக்கை நடந்தது.
தொடர்ந்து கடந்த 29ம் தேதி (சனிக்கிழமை), 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 31ம் தேதி (நேற்று) ரம்ஜான் பண்டிகை என தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டது. 3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று (ஏப்.1) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது.
கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். தொடர்ந்து துறைரீதியான மானியக்கோரிக்கை நடைபெறும். இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் (பொதுப்பணித்துறை) மீதான விவாதம் நடக்கிறது. விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசுவர். இதற்கு பதில் அளித்து துறை அமைச்சர் எ.வ.வேலு புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.