போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவரின் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சைக்கு பின்னர் கடந்த மார்ச் முதல் வாரத்தில் அவர் அபாய நிலைய தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர், “போப் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார். எனினும் அவர் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதனையடுத்து, ஐந்து வார கால சிகிச்சைக்கு பிறகு மார்ச் 23ம் தேதி போப் பிரான்சிஸ் வீடு திரும்பினர். இந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் நேற்று காலை 7:35 மணியளவில் தனது 88 வயதில் காலமானார். இதனை வாடிகன் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவித்தது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது என்று கூறியுள்ளது.
இந்த நிலையில், போப் பிராஸ்சிஸ் மறைவையொட்டி தமிழ்நாடுமு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்பபை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில், "கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகவும், பரிபோடும் முற்போக்கு கொள்கைகளோடும் பெரும் மாற்றங்களை முன்னெடுத்த போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் கொள்கிறது. போப் பிரான்சிஸ் இரக்கமுள்ளவராக, முற்போக்கு குரலாக, பணிவு, அறநெரிசார், துணிவு மற்றும் ஆழமான மனித நேயத்துடன் திருச்சபையை வழிநடத்தினார்.
வரியவர் மீதான அர்ப்பணிப்பு, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு, நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடல்களுக்கான அவரது முன்னெடுப்புகள், ஆகியவை கத்தோலிக்க உலகத்தை தாண்டியும் அவருக்கு பெரும் மரியாதையை பெற்றுத் தந்தன. அவரது மறைவால் வாடும் கத்தோலிக்க திருச்சபைக்கும், உலகெங்கும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்கும் இப்பேரவை ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறது" என கூறப்பட்டது. பின்னர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.