ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் 14ம் தேதி 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அவற்றின் மீது, மார்ச் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை இரு பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெற்றது.
தொடர்ந்து, 24-ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 9-ந் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இதையடுத்து தொடர் விடுமுறை காரணமாக தமிழ்நாடு சட்டசபைக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பின், சட்ட சபை மீண்டும் இன்று கூடுகிறது.
இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி துறை, மனிதவள மேலாண்மை துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பதில் அளித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். இம்மாதம் 29-ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.