Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை: 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல்!

06:28 AM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement

சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

Advertisement

ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தமிழ்நாடு அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் எதிர்நோக்கப்படுவதால், வரும் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் பிப்ரவரி மாதமே தாக்கல் செய்யப்படுகிறது. நிதித் துறை பொறுப்பை ஏற்ற பிறகு, அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடுகிறது. 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) தாக்கல் செய்யவுள்ளார். நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, வேளாண்மை நிதிநிலை அறிக்கையை அந்தத் துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நாளை (பிப். 20) தாக்கல் செய்கிறார்.

இதைத் தொடர்ந்து, பட்ஜெட்கள் மீதான விவாதம் பிப். 20, 21-ம் தேதிகளில் நடைபெறும். விவாதத்துக்கு 2 அமைச்சர்களும் 22-ம் தேதி பதில் அளிக்கின்றனர். மேலும், வரும் நிதி ஆண்டுக்கான துணை மானிய கோரிக்கைகளையும் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். தொடர்ந்து, நிதி ஒதுக்கத்துக்கான சட்ட மசோதா தாக்கல் செய்து, நிறைவேற்றப்படுகிறது.

சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் 7 முக்கிய அம்சங்கள் :

  • சமூகநீதி
  • ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றம்.
  • தமிழ்நாட்டு இளைஞர்களை சர்வதேச சாதனையாளர்களாக மாற்றுவது.
  • அறிவுசார் பொருளாதார வளர்ச்சி.
  • சமநிலையுடன் கூடிய பெண் முன்னேற்றம்.
  • நிலையான எதிர்காலம்.
  • தமிழ்மொழி மற்றும் பண்பாடு.

ஆகிய 7 சிறப்பு அம்சங்கள் தமிழகபட்ஜெட்டில் இடம்பெறும் என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், மக்களுக்கான சலுகை திட்டங்கள், புதிய அறிவிப்புகள் ஆகியவை இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Tags :
AppavuBudgetGovernorNews7Tamilnews7TamilUpdatesRN Ravispeakertamilnadu assemblyThangam thennarasuTN Assembly
Advertisement
Next Article