“விண்வெளியிலும் இனி அரசுப் பள்ளி மாணவர்கள் ஆட்சி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
“விண்வெளியில் கூட இனி அரசுப் பள்ளி மாணவர்கள் ஆட்சி செலுத்துவார்கள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டனர்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக எப்போது உயர்வார்கள் என்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் ஏங்கினார். இப்போது அவர் இல்லை. இருந்திருந்தால் பாராட்டி இருப்பார்.
மாணவர்கள் உயர்ந்தால் அந்த பெருமை ஆசிரியர்களுக்கு உண்டு. குழந்தைகள் உயர்ந்தால் அந்த பெருமை பெற்றோர்களுக்கு உண்டு. உங்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் நான் பாராட்டுகிறேன். பள்ளிக்கல்வித் துறையின் முன்னெடுப்பு இல்லையெனில் இந்த சாதனையை நாம் அடைந்திருக்க முடியாது. இங்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக உள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழி நான் பார்த்து வளர்ந்த பிள்ளை.
இன்னொரு முக்கிய விஷயம். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாக சொன்னார். அதற்காக அந்த துறையின் அமைச்சரான அன்பில் மகேஸுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. நீங்கள் செய்துள்ளது சேவை. மாணவர்களின் அறிவாற்றல் உலகிற்கே பயன்பட போகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் அரசுப்பள்ளி குழந்தைகள் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில், ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் சாரை சாரையாக மாணவர்கள் சேர்ந்து வருகிறார்கள்.
2022 ஆம் ஆண்டு 75 மாணவர்கள், 2023 ஆம் ஆண்டு 274 மாணவர்கள், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை அது இரு மடங்காகி 477 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும். கல்வித்துறை திராவிட மாடல் ஆட்சியில் மறுமலர்ச்சி அடைந்துள்ளது. உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே முதலில் உள்ளது. புதுமை பெண் திட்டத்தின் பயனாக, 34 விழுக்காடு மாணவிகள் சேர்க்கை உயர்கல்வியில் அதிகரித்துள்ளது
நான் முதல்வன் website மற்றும் மணற்கேணி ஆப்பில் கடந்த 10 ஆண்டுகளில் உள்ள பொதுத் தேர்வு வினாத்தாள்கள் உள்ளன. திட்டமிட்ட செயல்பாடுகளின் விளைவுதான் மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க செல்வது. உயர்கல்வி நிறுவனங்கள் என்றால் ஐஐடி, என்ஐடி மட்டுமல்ல. தேசிய சட்டப் பல்கலைக்கழகம், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களிலும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டு மாணவர்களின் வேகம் இந்தியாவோடு மட்டும் நிற்கவில்லை.
14 மாணவர்கள் தைவான், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் முழு கல்வி செலவை இலவசமாக பெற்றுள்ளனர். அவர்கள் பயணம் செய்யும் முழு செலவை அரசு செய்யும். அரசுப்பள்ளி மாணவர்கள் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களுக்கு செல்வது, சமூக பொருளாதார மாற்றத்திற்கான அடித்தளம். இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சலைத்தவர்கள் இல்லை என்பதை அடிக்கடி நிரூபிக்கின்றனர். வாய்ப்பு கிடைத்தால் நம் மாணவர்கள் எதையும் சாதிப்பார்கள். விண்வெளியில் கூட இனி அரசுப் பள்ளி மாணவர்கள் தான் ஆட்சி செலுத்துவார்கள்.
அவர்களுக்கு என் அரசு உறுதுணையாக இருக்கும். தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாக தான் மாணவர்கள் உங்கள் நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உங்கள் பிள்ளைகள் போல் எங்கள் மாணவர்களை பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு வேண்டிய உந்துதல்களை வழங்க வேண்டும்.
இந்த இடத்திற்கு நீங்கள் பல தடைகளை தாண்டி வந்து உள்ளீர்கள். இனியும் தடைகள் வரலாம். எதை பற்றியும் கவலைப்படாமல், படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தன்னம்பிக்கை உள்ளவர்களாக உயருங்கள். தமிழ்நாடு பெருமை பட, இந்தியா பெருமை பட நீங்கள் உயர தமிழ்நாடு முதலமைச்சராக மட்டுமல்ல உங்களில் குடும்பத்தில் ஒருவராக அன்போடு கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.