நாட்டிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நாட்டிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி இன்று (ஜன.2) தமிழ்நாடு வந்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக உயர்கல்வி துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதற்காகப் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து இன்று காலை 10 மணிக்கு தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், காரில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்ற பிரதமர் மோடி, அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் காலை 10.30 மணிக்கு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். அங்கு மாவணர்களுடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் உடன் பங்கேற்றனர்.
பின்னர், விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி. இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. திராவிட கொள்கையை தமிழ் நிலத்தில் முழங்கியவர் பாரதிதாசன். மாணவர்களை ஊக்குவிக்க, பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 29 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். மாணவர்கள் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.