For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...!

06:43 PM Jan 19, 2024 IST | Web Editor
அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது   அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement

“கல்வி, மருத்துவம் ஆகியவை மட்டுமின்றி தற்போது விளையாட்டு போட்டிகளிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது”  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

Advertisement

மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது சென்னையில் நடைபெறும் "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டிகளின் துவக்க நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர்

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கி வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 11 நாட்கள் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் முதல் முறையாக இந்த கேலோ இந்தியா போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இதில் சுமார் 36 மாநிலங்களைச் சேர்ந்த 5500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் பங்கேற்க இன்று மாலை 4 மணியளவில் பெங்களூருவில் இருந்து புறப்பட்ட நரேந்திர மோடி , சுமார் 4 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் கே என் நேரு, துரைமுருகன் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

நேரு வெளி விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா, தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதையடுத்து,  பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மேலும் இந்நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணை அமைச்சர்கள் நிஷித் பிராம்னிக், எல்.முருகன் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

நேரு வெளி விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

மிகப்பெரிய விளையாட்டு பாரம்பரியம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்னேறியுள்ளது . செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் குறைவான நேரத்தில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்திக்காட்டியது.

அதனை அடுத்து ஆசிய ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலக கோப்பை உள்ளிட்ட பல தொடர்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதலே பல சர்வதேச போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்பட ஊக்கம் அளித்து வரும் முதலமைச்சருக்கு நன்றி. திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு நடத்திய முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் 3.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் தடகள வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 76 புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்துள்ளோம். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்த வேண்டும் என்ற கனவு தற்போது நனவாகியுள்ளது. பொருளாதாரரீதியாக பின்தங்கிய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உதவி செய்து வருகிறது.

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு விளையாட்டு கிட்-களை வழங்க உள்ளோம். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவித் தொகை அளிக்கும் சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் புதிய வரலாறு படைக்கும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

நேரு உள் விளையாட்டு அரங்கில் தற்பொழுது இந்த கோலாகல விழா நடைபெற்று வருகிறது.  அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement