“தமிழ்நாட்டில் தான் 21% பெண்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்” - டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்!
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு காவல்துறையில் 21% பெண் காவலர்கள் பணியாற்றி வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மகளிர் காவலர்கள் பொன்விழா தமிழ்நாடு காவல்துறையால் கொண்டாடப்பட்டது. இந்த பொன்விழா கொண்டாட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
காவல் துறையில் மகளிர் முக்கியப் பங்காற்றுவதுடன் மாநில, தேசிய, சர்வதேச அளவில் நடத்தப்படும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையில் மகளிருக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், விளையாட்டுப் போட்டிகளையும் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, மாநில அளவிலான மகளிர் காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி மற்றும் அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்தும் பொறுப்பு தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான மகளிர் காவல்
துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை போட்டியை நடத்த அகில இந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாடு வாரியம்
கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆண் மற்றும் மகளிருக்கான அகில இந்திய
போலீஸ் துப்பாக்கி சுடுதல் போட்டி (AIPDM) ஆண்டுதோறும் மாநில காவல்துறை அல்லது
மத்திய ஆயுதப் படைகள் மூலமாக புதுடெல்லி அகில இந்திய காவல்துறை விளையாட்டுக்
கட்டுப்பாடு வாரியத்தின் (AIPSCB) கீழ் நடத்தப்படுகிறது,
காவல்துறை அமைப்புகள், மத்திய ஆயுதப் படைகளில் உள்ள ஆயுதங்கள் குறித்த மதிப்பிடுதல் மற்றும் தொழில்முறை திறன்களை மேம்படுத்துதலுக்கான நோக்கத்துடன் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் மகளிர்கள் பங்கேற்று 50 ஆண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மகளிர்க்கான அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி காவல்துறையால் நடத்தப்படுகிறது. இந்த போட்டியினை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர், ஆவடி பெருநகர காவல் ஆணையர் சங்கர் உட்பட காவல்துறையை சார்ந்த உயர் அதிகாரிகள், காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி மேடையில் பேசிய சங்கர் ஜிவால்,
“கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் 9 சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில், பெண்களுக்காக துப்பாக்கி சூடுதல் போட்டியானது காவல்துறை சார்பில் நடத்தப்படுகிறது. முதலமைச்சர் அறிவித்ததை போல் இந்த பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியானது வருகின்ற 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதுதான் இந்தியாவில் நடைபெறக்கூடிய முதல் பெண் காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டி.
குறிப்பாக இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு காவல்துறையில் 21 சதவீதம் பெண் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பதை மிகவும் பெருமையாக தெரிவித்துக் கொள்கிறோம். காவல்துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளிலும் பெண் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த அகில இந்திய பெண் காவலர்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியானது கடந்த
ஒரு மாதங்களாக திட்டமிடப்பட்டு இன்று இந்த போட்டியானது தொடங்கியுள்ளது. அதேபோல் இது மட்டுமே கடைசி போட்டியாக அமைந்திடாது. மேலும் காவல்துறை சார்பில் இதே போன்ற சிறப்பு அகில அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியானது வரக்கூடிய ஆண்டுகளில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது” எனப் பேசினார்.