இங்கிலாந்து தேர்தலில் எதிரொலித்த தமிழ்நாடு அரசின் ‘முத்திரைத் திட்டங்கள்’! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூன்றையும் பிரிட்டன் தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவித்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்துவதில் உறுதிகொண்டு உன்னதமான பல திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள்.
இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களிடமும் இந்தியாவின் இதர மாநிலங்களிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. அத்திட்டங்களில் முதலமைச்சரின் “காலை உணவுத் திட்டம்", "நான் முதல்வன் திட்டம்", "கலைஞர் கனவு இல்லம் திட்டம்" ஆகிய மூன்றும் பிரிட்டன் நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 31,008 அரசுப் பள்ளிகளில் 18.54 லட்சம் மாணவ, மாணவியர் சூடான, சுவையான காலை உணவை உண்டு மகிழ்ச்சியுடன் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். காலை உணவு உண்ணாமல் பள்ளி செல்லும் குழந்தைகளை எண்ணிக் கவலை கொண்டிருந்த தாய்மார்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.
இத்திட்டத்தை, தெலுங்கானா மாநில அரசு உட்பட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றுள்ளன. மேலும், கனடா நாட்டு பிரதமர் இத்திட்டத்தை வரவேற்றுத் தம்முடைய நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளார்.
நான் முதல்வன்
நான் முதல்வன் திட்டத்தின் அடிப்படை நோக்கம் கல்விக்கும், வேலைவாய்ப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதில் உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களில் 76.4 சதவீதம் இன்ஜினியரீங் மாணவர்களும், 83.8 சதவீதம் கலை மற்றும் அறிவியல் மாணவர்களும் தொடர்ந்து வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 1,48,149 இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் இளைஞர்களிடமும் பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன் வீடுகட்டுவதற்கான தொகையை அரசு அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தி பயனாளிகளே தங்கள் கனவு இல்லங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய இந்த மூன்று திட்டங்களையும் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மக்களின் ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றிகண்டுள்ளது”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.