ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு எதிரொலி: 2 மசோதாக்கள் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டதாக தகவல்!
தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை என கூறப்பட்ட நிலையில், அதில் 2 மசோதாக்கள் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த அக். 31-ம் தேதி அவசர வழக்காகத் தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு சபை அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்துள்ளார். சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களில் விளக்கம் கேட்டு ஆளுநர் ரவி இன்று திருப்பி அனுப்பினார். இந்நிலையில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பியதாகவும், மீதமுள்ள 2 மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதில் சென்னைப் பல்கலைக்கழக (திருத்த) மசோதா, 2022. (பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நியமிப்பதற்கும், நிதிச் செயலாளரை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகச் சேர்ப்பதற்கும்) கடந்த ஏப்ரல் 25-ம் தேதியிட்டது, தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா, 2022, (சென்னைக்கு அருகில் தனி சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் இந்திய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்) கடந்த ஏப்ரல் 28-ம் தேதியிட்ட குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை ஆளுநர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநரின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் நாளை மறுநாள் கூடும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.