விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை, தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்துவதாகவும், தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்திட இயலாது என்றும், சமூக நீதி அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் சாதி அடிப்படையிலான தொழில் முறையை வெளிப்படுத்துகிறது. ஆகையால் விஸ்வகர்மா திட்டத்தை தற்போது தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது. விஸ்வகர்மா திட்டத்தை ஆராய தமிழ்நாடு அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டு, விரிவான ஆய்வு செய்யப்பட்டது. திட்டத்தில் மாற்றம் செய்திட மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, அதனை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால் மத்திய அரசு அளித்த பதிலில் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் குறிப்பிடப்படவில்லை.
எனவே தமிழ்நாட்டுக்கென விரிவான திட்டம் ஒன்றை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சமூக நீதி அடிப்படையில் சாதி பாகுபாடு இல்லாமல் கைவினை கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புது திட்டத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.