ஆட்டோ கட்டணம் மறுசீரமைப்பு குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை - போக்குவரத்து ஆணையர் தகவல்!
ஆட்டோ கட்டணம் மறுசீரமைப்பு குறித்து அரசு பரிசீலித்து வருவதாக, தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் ONDC எனப்படும் டிஜிட்டல் வர்த்தகத்தின் திறந்த நெட்வொர்க் - இன் ஒரு பகுதியான ஆட்டோ புக்கிங் செயலி 'நம்ம யாத்ரி' என்ற புதிய ஆட்டோ செயலி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதையடுத்து, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறப்பு அதிகாரி ஜெயக்குமார், நாஸ்காமின் தென்மண்டலத் தலைவர் பாஸ்கர் வர்மா, 'நம்ம யாத்ரி'யின் அதிகாரிகள் டி.கோஷி, விமல் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் இணைந்த ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கியும் வைத்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களால் மேம்படுத்தப்பட்ட நம்ம யாத்ரி செயலி, பயணிகளுக்கு குறைந்த செலவில் வசதியான போக்குவரத்தை வழங்கும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் ;“கடந்த 29 நாட்களில் 189 உடல் உறுப்புகள் தானம்” – தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் அறிவிப்பு.!
இதில் சிறப்பு விருந்தினராக சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பேசியதாவது: "சிஎம்டிஏ-வின் எல்லை வரையறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் தாலுகா வரை சி.எம்.டி ஏ. தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இனி சென்னை உரிமம் பெற்ற ஆட்டோக்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்குள் சென்று வர முடியும். அதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும்.
எந்த ஒரு தொழில்நுட்பமும் மனிதர்களுக்கு பயன்பட வேண்டும். இல்லை என்றால் அந்த தொழில் நுட்பத்தால் எந்த பயனும் இல்லை, சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. ஆட்டோ கட்டணம் மறு சீரமைப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது, 2013ஆம் ஆண்டு அரசு நிர்ணயித்த ஆட்டோ கட்டணம்தான் தற்போது வரை வசூலிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.