“தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழ்நாடு அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது!” - ஆளுநர் #RNRavi
தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழ்நாடு அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (14.10.2024) இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் (15.10.2024) இன்று இரவு முதல் அதி கனமழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழையை எதிர்கொள்ளும் விதமாக தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சேலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது:
தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கும் மழை தொடரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ற வகையில் தமிழக அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மழை பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன் என்று கூறினார்.