‘கங்குவா’ - சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் கங்குவா திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படம் வரும் நவ. 14-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் நவம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் கூடுதலாக இரண்டு காட்சிகளை திரையிட படத் தயாரிப்பு நிறுவனம் அனுமதி கோரி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இதையும் படியுங்கள் : ம.பியில் பெண்ணை நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லும் #ViralVideo - தற்போதையதுதானா?
இந்நிலையில், ‘கங்குவா’ திரைப்படம் வெளியாகும் நாளான வரும் நவ.14ம் தேதியன்று, காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதியளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இப்படத்தை தமிழ்நாட்டில் 800 திரைகள், வட இந்தியாவில் 3,500 திரைகள் உள்பட ஒட்டுமொத்தமாக 6,000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.