தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி!
நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த விவகாரம் குறித்து பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்த நிலையில், இந்த முக்கிய முடிவை அரசு எடுத்துள்ளது.
இந்த அரசாணையின்படி, நோய்வாய்ப்பட்ட அல்லது குணப்படுத்த முடியாத காயங்களுடன் அவதிப்படும் தெரு நாய்களை மட்டுமே கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கப்படும். இந்தக் கருணைக் கொலையானது, பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவர்கள், விலங்குகளுக்கு தேவையற்ற வலியை ஏற்படுத்தாத வகையில், மனிதாபிமான முறையில் இந்தக் கருணைக் கொலையைச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த முழுமையான ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அரசாணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதில், நாயின் நிலை, நோயின் தன்மை, கருணைக் கொலை செய்வதற்கான காரணம், தேதி, நேரம், கருணைக் கொலையைச் செய்த கால்நடை மருத்துவரின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற வேண்டும். இது, வெளிப்படைத்தன்மையைப் பேணவும், விதிமுறைகள் மீறப்படுவதைத் தடுக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து இந்த அரசாணை, தெரு நாய்கள் மேலாண்மை மற்றும் விலங்கு நலன் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. ஒருபுறம், நோய்வாய்ப்பட்ட நாய்களின் துயரத்தைக் குறைக்கவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை அவசியம் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.
மறுபுறம், விலங்கு நல ஆர்வலர்கள், கருணைக் கொலை என்பது கடைசி வழிமுறையாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கான பிற வழிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த அரசாணை குறித்த விரிவான வழிகாட்டுதல்களையும், அதனை நடைமுறைப்படுத்தும் முறைகளையும் தமிழ்நாடு அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.