“தமிழ்நாட்டில் நாளை முதல் அக். 16 வரை மிக கனமழைக்கு வாய்ப்பு” - ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த #IMD !
வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் எனவும், இதனால் தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அங்கு தொடர்ந்து வருவதாகவும், இன்று (அக். 13) வடமேற்கு திசைக்கு நகர்ந்து மத்திய அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழக மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் தனித்தனி வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காணப்படுவதாகவும், இதனால் அரபிக்கடலில் நிகழும் காற்றழுத்தம் மேற்கே நகர வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் நாளை (அக். 14) உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் எனவும், அது வடதமிழ்நாட்டின் கரையோரம் நிலவக்கூடும் என்பதால் தமிழ்நாட்டிற்கு மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் எனவும் தொடர்ந்து அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு நோக்கி நகர்ந்து வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கரையோரம் நிலவக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.