For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு மீனவர்கள் கைது விவகாரம் | நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி-க்கள் போராட்டம்!

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
07:08 PM Feb 07, 2025 IST | Web Editor
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மீனவர்கள் கைது விவகாரம்   நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம் பி க்கள் போராட்டம்
Advertisement

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. தற்போது இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 97 மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட 216 மீன்பிடி படகுகளை விடுவிக்க கோரியும், மீனவர்கள் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மக்களைவையில் இவ்விவகாரத்தை விவாதத்திற்கு எடுக்குமாறு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி அவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்தார்.

Advertisement

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து இன்று காலை 10:30 மணியளவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தமிழ்நாடு எம்.பிக்கள் நாடாளுமன்ற வாயிலில் போராட்டம் நடத்தினர். அவர்கள் தமிழ்நாடு மீனவர்களை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்திந்த திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. பேசியதாவது,

"இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதும் துன்புறுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. தற்போதுகூட 97 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சருக்கும் - பிரதமருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். அவர் இங்கே வரும்போதெல்லாம் தொடர்ந்து பிரதமரிடம் மீனவர்கள் பாதுகாப்பிற்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

இதுவரை 210 படகுகளை இலங்கை கடற்படையினர் எடுத்துச் சென்றுள்ளனர். படகில்லாமல் மீனவர்கள் என்ன செய்வார்கள்? எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் இது மிகப்பெரிய பிரச்னை. மத்திய அரசு மீனவக் குழுக்களுடன் கலந்தாய்வு செய்து பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண குழு அமைப்பதாக உறுதியளித்திருந்தது. ஆனால் அதற்கான எந்த முயற்சியும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.

கைது செய்யப்பட்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களின் படகுகளை திருப்பிக் கொடுக்க வேண்டும். எங்கள் மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மத்திய அரசு உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் வலியுறுத்தியிருப்பதை போல் இப்பிரச்னைக்கு மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நிரந்தரத் தீர்வு காண வேண்டும்"

இவ்வாறு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

Advertisement