தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம்! மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரிய ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி!
தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று நெடு நாட்களாக மீனவர்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறனர். ஆனால் நிரந்தர தீர்வு காணப்படாமல் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் என வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறனர்.
கடந்த 5ம் தேதி நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 25 பேரையும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்படி தொடர்ந்து கைது செய்யப்பட்டு கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் விஷயத்தில் நிரந்தர தீர்வை உடனடியாக காண விவாதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், உடனடியாக மக்களவையின் நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு மீனவர் விவாகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரியுள்ளேன்.
இவ்வாறு ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.