"ஆளுநர் தமிழகத்திற்கு தேவை இல்லை" - கனிமொழி எம்.பி. பேட்டி!
பெரியாரையும் திராவிட இயக்கம் குறித்தும் அடிப்படை புரிதல் இல்லாமலும், அப்படி புரிந்து இருந்தால் தங்களது எஜமானர்களுக்காக இதுபோன்று கருத்துக்களை தெரிவித்து வருவதாக எம்பி கனிமொழி கடலூரில் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அடுத்த லால்பேட்டையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
முன்னதாக கடலூர் சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முதலீடுகளை ஈர்த்து வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, பெரியார் தொடர்பான சீமான் கருத்துக்கு பதில் அளித்த அவர், தன்னுடைய முகவரி விலாசம் காணாமல் போவதால் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கின்றனர் என கூறினார்.
யாரால் படித்தோம், யாரால் வளர்ந்தோம் இதற்கு தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் தான் காரணம் என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் தங்களது எஜமானர்களுக்காக இதுபோன்று கருத்துக்களை தெரிவித்து வருவதாக சாடினார்.
மேலும், தமிழக அரசுக்கும், ஆளுநருக்கு மோதல் போக்கு குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆளுநர் தமிழகத்திற்கு தேவை இல்லை என்று தான் தெரிவிக்கிறோம் எனக்கூறி புறப்பட்டார். இந்நிகழ்வின் போது வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்