திருச்சியில் 2 கி.மீ நீளத்தில் புறவழிச்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை! போக்குவரத்து நெரிசலை தடுக்க #TNGovt -ன் அசத்தல் திட்டம்!
பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை 2 கி.மீ நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூர் முதல் கோணக்கரை கரூர் சாலை வரை, கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறுகளின் கிழக்கு கரை பகுதியில் மூன்று பகுதிகளாக புறவழிச்சாலை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதில், பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை 2 கி.மீ நீளத்திற்கு திட்டப்பணி பகுதி I - க்கு ரூ.81.72 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
"திருச்சிராப்பள்ளி மாநகரில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், பல்வகை பயன்பாட்டு வசதிகளுக்கான மையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதில் பணிகள் இறுதி நிலையில் உள்ளது. மேலும், இப்பகுதியில் காய்கறி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை அங்காடி மற்றும் டைடல் பார்க், கணினி மென்பொருள் பூங்கா அமையவுள்ளன.
இதையும் படியுங்கள் : “விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது!” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பெருகிவரும் மக்கள் தொகை காரணமாகவும், மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்கும் வகையிலும், மேற்படி பகுதியில் புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இச்சாலையானது பஞ்சப்பூரில் தொடங்கி கரூர் சாலை வரை 9.90 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை 2.00 கி.மீ நீளத்திற்கு புறவழிச்சாலை திட்டப்பணி பகுதி-1-க்கு ரூ.81.72 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி புறவழிச்சாலை திட்டப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் போது மாநகருக்குள் எற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைக்கப்படும்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.