தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா!
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் ஆர்.சண்முகசுந்தரம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் இரண்டரை ஆண்டுகளாக அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்து வந்த நிலையில் தற்போது ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
1989-1991-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பணியாற்றினார். 1996 முதல் 2001 வரை மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்தார். 2002 முதல் 2008 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் சண்முகசுந்தரம். இந்த நிலையில், தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு அரசிடமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனது முடிவை அவர் தெரிவித்துவிட்டார் எனவும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகுவதாகவும், அரசு பொறுப்பில் இருந்து விலகி தனியாக வழக்கறிஞர் தொழிலை தொடர உள்ளதாகவும் அரசிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் புதிய ஏ.ஜி. நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.