முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. துறை ரீதியான அமைச்சர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் இந்த கூட்டம் நடைபெற்றது.
உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு கூகுள் நிறுவனத்தின் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை தொடங்கிய அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. மேலும் தமழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் பணிகளை வேகப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு க ஸ்டாலினின் அமெரிக்கா செல்லும் நிலையில் அதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து முடிவுகள் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை. வேறொரு அரசுப் பணி காரணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.