தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி! 6 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம்!
தமிழ்நாடுஅமைச்சரவையில் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயம் கடந்த சில வாரங்களாகவே பேசு பொருளாக இருந்து வருகிறது. அதே சமயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு, மாற்றம் இருக்கும்.. ஏமாற்றம் இருக்காது என பொடி வைத்து பேசினார். இந்த சூழ்நிலையில் பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கிடைத்து நேற்று முன் தினம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைகள் துறை கூடுதல் பொறுப்பாகவே தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. செந்தில் பாலாஜி வெளியே வந்த நிலையில், அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுவது உறுதியானது.
இதுபோலவே மூத்த அமைச்சர்கள் சிலர், ஜூனியர் அமைச்சர்களின் சிலரின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என்றும், சிலர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, புதிதாக சிலர் சேர்க்கப்படலாம் என்றெல்லாம் கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்திற்கான கடிதம் ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் மற்றும் 4 புதிய அமைச்சர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதோடு 6 அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்...
இதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.