"ஏப்.30 வரை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்" - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி கூடியது. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றாலும், சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசித்த ஆளுநர் உரை அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11-ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையும் இடம்பெற்றது.
அத்துடன் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (மார்ச் 14) மீண்டும் கூடியது. தொடர்ந்து, 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
"சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்.30 வரை நடைபெறும். மார்ச் 17-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. மார்ச் 21-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும். நாளை சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெறும்"
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.