"தமிழ் பட இயக்குநர் என்னை அறைந்தார்" - நடிகை #Padmapriya பரபரப்பு குற்றச்சாட்டு
மிருகம் படத்தில் நடிக்கும் போது படத்தின் இயக்குநர் தன்னை அறைந்ததாக நடிகை பத்மபிரியா தெரிவித்துள்ளார்.
2004ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சீனு வசந்தி லட்சுமி' என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை பத்மபிரியா. சேரனின் 'தவமாய் தவமிருந்து' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மலையாள நடிகையான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் பிரபலமானவர். தமிழில் இவர் சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த சூழலில், மிருகம் படத்தில் நடித்தபோது படத்தின் இயக்குநர் தன்னை அறைந்ததாக பத்மபிரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை பத்மபிரியா கூறியதாவது,
"மிருகம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போது உணர்வுப்பூர்வமாக நடிக்கவில்லை என இயக்குநர் என்னை அறைந்தார். இச்சம்பவத்தை நடிகர் சங்கத்தின் கவனத்திற்கு நான் கொண்டு சென்றேன். இதனையடுத்து, என்னை நாயகியாக வைத்து படம் எடுப்பதாக உறுதியளித்தவர்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை. திரைத்துறையில் பெண்கள் தங்களின் பிரச்னையைப் பேசினால் அவர்களே பிரச்னைகளாக மாறிவிடுகின்றனர்.
ஆண்களுக்குக் கொடுக்கப்படும் பலமான கதாபாத்திரங்கள் பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. இங்கு அழகான, மனமுடைந்த, நடன மங்கையாகவே பெண்களுக்கான கதாபாத்திரங்கள் வழங்கப்படுகின்றன. பாலின பாகுபாடு பற்றியும் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தையும் தொடர்ந்து பேச வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக அது உங்களை மீண்டும் காயப்படுத்தும்.”
இவ்வாறு நடிகை பத்மபிரியா தெரிவித்துள்ளார்.