இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் வேட்பாளர்? - ஆர்.சம்பந்தன் பேட்டி!
“இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருப்பதாக அதன் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தற்போதே வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் இலங்கை அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“சிறுபான்மையினரான தமிழ் சமூகம் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் அரசியல் தீர்வை உறுதியளிக்கும் ஒரு வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிபர் தேர்தலில் தமிழர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வந்துள்ளது. ஆனால், அத்தகைய வேட்பாளருக்கு போதிய ஆதரவைப் பெற முடியாது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, கட்சிகள் சிறந்த நடவடிக்கையை தீர்மானிக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழர்களுக்கு நம்பகமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பாளரே தமிழர்களின் முக்கிய அரசியல் காரணியாக இருக்க வேண்டும். அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் போட்டியிட்டால், அவருடனான பேச்சுவார்த்தையைப் பொறுத்து ஆதரவு அளிக்கப்படும்”
இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.