நாளை முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் வழக்கமான ரயில் சேவை!
தாம்பரம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி கடந்த பல நாள்களாக முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட ரயில் சேவை நாளை முதல் வழக்கமாக இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் சென்ட்ரல், எழும்பூர் என 2 பிரதான ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் இருந்து அதிகபட்ச ரயில்களை இயக்குவதால் புதிய ரயில்களை இயக்க இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அதனை நிவர்த்தி செய்ய 3வது ரயில் முனையமாக தாம்பரம் ரயில் முனையம் உருவாக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு புகர் பேருந்து முனையம் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்ட பிறகு தாம்பரம் சென்னையின் நுழைவு வாயில் நகரம் என்ற நிலையில் இருந்து, தற்போது பிரதான ரயில் முனையமாக மாறியுள்ளது.
தினமும் 1.5 லட்சம் முதல் 3 லட்சம் பயணிகளை தாம்பரம் ரயில் நிலையம் கையாளுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் அமைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கிருந்து நாகர்கோவில், செங்கோட்டை, புதுச்சேரி மற்றும் வெளிமாநில நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விரிவாக்க பணிகள்: தாம்பரம் ரயில் நிலையத்தில் தற்போது 8 நடைமேடைகள் உள்ளன. முதல் இரு நடைமேடைகள் தாம்பரம் - சென்னை கடற்கரை மின்சார ரயில்களை இயக்கவும், 3, 4 நடைமேடைகள் செங்கல்பட்டு மாா்க்கமாகச் செல்லும் மின்சார ரயில்களை இயக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
மீதமுள்ள நடைமேடைகள் விரைவு மற்றும் சரக்கு ரயில்களை இயக்க பயன்படுத்தப்படுகின்றன. இனிவரும் காலங்களில் தேவையைக் கருத்தில் கொண்டு, தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை மற்றும் இணைப்பு பாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தாம்பரம் பணிமனையில் ரயில்களைப் பராமரிக்கவும், ரயில்களின் சீரான இயக்கத்துக்கு வழிவகை செய்யவும் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, “தாம்பரம் வழியாக செல்லும் விரைவு ரயில்கள் 10 முதல் 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 35 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதிக்கப்படும். மேலும் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தாம்பரத்தில் இருந்து சிறப்பு மற்றும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். ரயில் நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன” என தெரிவித்தனர்.
கடந்த இரு வாரங்களாக தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆக.15 முதல் ஆக.18-ம் தேதி வரை மின்சார ரயில்கள் மட்டுமின்றி விரைவு ரயில்களும், தாம்பரத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தாம்பரம் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளதால் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.