“மத்திய அரசின் மீதான விமர்சனத்தை மறைக்க பெரியார் குறித்து பேச்சு... இது போதாதா அவரை மரியாதை செய்ய?” - நிர்மலா சீதாராமனுக்கு விஜய் கேள்வி!
2025 - 2026 பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் (மார்.10) தொடங்கிய நிலையில், திமுக எம்பிக்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், மும்மொழி கொள்கை குறித்தும் பேசினர். மும்மொழிக் கொள்கையில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்றும் மாறாது எனப் பேசியிருந்தனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக்கொள்கை திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்து போட வந்தபோது சூப்பர் முதலமைச்சர் அதை தடுத்துவிட்டார். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அம்மாநில அரசு வஞ்சிக்கிறது. திமுகவினர் அநாகரீகமானவர்கள். அவர்கள் ஜனநாயகம் இல்லாதவர்கள். அம்மாநில மாணவர்களின் நலனில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். அம்மாநில மக்களுக்கும் அவர்கள் நியாயமானவர்களாக இல்லை” என்றார்.
அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சுக்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து தனது கருத்தை திரும்பப்பெற்ற தர்மேந்திர பிரதான் “என்னுடைய பேச்சு யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதனை தான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்” எனப் பேசி இருந்தார்.
தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய நிலையில், அவரை மன்னிப்பு கோர வைத்தீர்கள். ஆனால் தமிழை காட்டுமிராண்டி மொழி என கூறியவரின் புகைப்படத்தை அனைத்து அறைகளிலும் மாலை போட்டு வைத்துள்ளீர்கள்” என்றார்.
இந்நிலையில் பெரியார் குறித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?
முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!? குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
மத்திய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே... இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு?!
பெரியார் போற்றுதும்! பெரியார் சிந்தனை போற்றுதும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.