ஆப்கானில் இந்துக்களின் சொத்துக்களை திரும்ப அளிக்கும் பணியில் தலிபான் நிர்வாகம்!
ஆப்கானிலிருந்து புலம் பெயர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்களின் சொத்துக்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கவுள்ளதாக தலிபான்கள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் மூத்த தலிபான்அதிகாரி கூறியதாவது:
"ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் சிறுபான்மையினர்களான இந்துக்கள் மற்றும் சீக்கிய சமூகத்தினரின் சொத்துகளை மீட்டு அவர்களிடமே திருப்பி தர தலிபான் அரசு தீர்மானித்துள்ளது. கடந்த ஆட்சியின்போது அபகரிக்கப்பட்ட அனைத்து சொத்துகளையும் அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி தர ஒரு கமிஷன் நிறுவப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தலிபான் அரசுடன் இந்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாகும்"
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டை விட்டு இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் சிறுபான்மையினர் பலர் வெளியேற்றப்பட்டனர். அந்த வகையில், காபூலில் இருந்து துரத்தியடிக்கப்பட்டவர்களில் ஒருவர் அன்று ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த நரேந்திர சிங் கல்சா.
இவர் ஆப்கன் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் அடங்கிய சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு எம்.பி.க்களில் ஒருவராக இருந்தார். ஆப்கனிலிருந்து வெளியேறி கனடா நாட்டுக்கு புலம்பெயர்ந்த இவர் தற்போது ஆப்கன் திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.