"தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து, மீண்டும் பணி வழங்கவேண்டும்" - அன்புமணி ராமதாஸ்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "சேலம் மாநகரம் சூரமங்கலத்தில் சுமார் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த சில நாள்களுக்கு மின் கதவடைப்பு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, பணியாளர்கள் அனைவரும் தானாக பணி விலகும் சூழலை ஏற்படுத்தி நிறுவனத்தை நிரந்தரமாக மூட அதன் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்தத் தொழிலாளர் விரோதப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
சூரமங்கலத்தில் 1975-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தலேமா நிறுவனம் பின்னர் ஸ்வீடனை தலைமையிடமாகக் கொண்ட காமிக் குழுமத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் தலேமா நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொடர்ச்சியாக லாபம் ஈட்டி வந்த நிறுவனத்தை மூடுவதற்காக நஷ்டக் கணக்குக் காட்டப்படுவதாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த அநீதியை அனுமதிக்கக் கூடாது.
தலேமா நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்காகவே அதன் நிர்வாகம் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக அங்கு பணியாற்றும் 300 பெண்கள் உள்ளிட்ட 600 பணியாளர்களையும் பணியிலிருந்து தானாக விலகிக் கொள்ளும்படி அதன் பொதுமேலாளர் வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதற்கு தொழிலாளர்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில், தலேமா நிறுவனம் தானாக முன்வந்து கதவடைப்பு செய்திருக்கிறது.
தலேமா நிறுவனம் கதவடைப்பு செய்யக்கூடாது என்று தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியும் அதையும் மீறி தலேமா நிறுவனம் கதவடைப்பு செய்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசு, அதன் கடமையை மறந்து தலேமா நிறுவனத்தின் தொழிலாளர் விரோத செயல்களுக்கு துணை போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் போக்கை தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசுத் துறை மூலம் 5.5 லட்சம் பேருக்கும், தனியார் நிறுவனங்கள் மூலம் 50 லட்சம் பேருக்கும் வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதில் 10 விழுக்காட்டைக் கூட நிறைவேற்றவில்லை. புதிய வேலைவாய்ப்புகளை உருவாகும் திறனற்ற திமுக அரசு, இருக்கும் வேலைவாய்ப்புகளையாவது காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலேமா நிறுவனத்தின் உயரதிகாரிகளை தமிழக அரசு அழைத்துப் பேசி, ஆலை எதிர்கொண்டு வரும் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, அதை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு பணியாற்றும் 600 தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து பணி வழங்கப்படுவதையும், அவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.