உச்சநீதிமன்ற வளாகத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க தடை!
உச்ச நீதிமன்றத்தின் பாதுகாப்பு குழு சார்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "உச்ச நீதிமன்றத்தில் ஊடகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் தான் ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் பேட்டி எடுப்பது நேரலை செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். அவற்றைத் தவிர உயர் பாதுகாப்பு வளையப்பகுதிகளுக்குள் புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோக்களை பதிவு செய்யவும் முழுமையாக தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமரா செல்ஃபி ஸ்டிக் போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களை எடுத்து வரவும் தடை விதிப்பதாகவும், இத்தகைய கட்டுப்பாடுகளை மீறி ஊடகங்களை சேர்ந்தவர்கள் நடந்து கொண்டார்கள் என்றால் அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் உயர் பாதுகாப்பு பகுதிகளுக்குள் வர ஒரு மாத காலம் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய விதிமீறல்கள் உச்ச நீதிமன்றத்தின் ஊழியர்கள் யாரேனும் மேற்கொண்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் அதிகாரத்தை அந்த பகுதிகளின் பணியமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.