தக் லைஃப்-ன் ‘முத்த மழை’ வீடியோ பாடல் வெளியீடு!
‘நாயகன்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான படம் ‘தக் லைஃப்’. கடந்த ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
எதிர்பார்த்த வெற்றியை இப்படம் பெறவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை இப்படம் வெறும் ரூ.100 கோடி மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ‘முத்த மழை’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை பாடகி தீ பாடியுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா விழாவில் இதே பாடலை பாடகர் சின்மயி பாடினார்.
ஆனால் தீ பாடியதைவிட, சின்மயி பாடிய பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் சின்மயி குரலை வியந்து பாராட்டினர். அதே சமயம் தீ குரலுக்கும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். படம் வரும் முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் பாடல் படத்தில் எந்த இடத்தில் இடம்பெறும் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தப் பாடல் படத்தில் இடம்பெறவேயில்லை. இதனால் பாடல் வீடியோவை வெளியிட ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இந்தப் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.