தைவான் நிலநடுக்கம் - மனதை உருக வைத்த செவிலியர்கள்!
தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது மருத்துவமனை ஒன்றில், செவிலியர்கள் குழந்தைகளை பாதுகாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் கடந்த 4 ஆம் தேதி அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானதாகவும், சுமார் 35 கி.மீ. ஆழத்தில் பதிவானதாகவும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மைய அமைப்பு தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தினால் 9 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பல சேதங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நிலநடுக்கத்தின் போது மருத்துவமனை ஒன்றில் செவிலியர்கள் தொட்டிலில் இருக்கும் பிஞ்சு குழந்தைகளை ஒன்றிணைத்து, அணைத்து ஒரே இடத்தில் வைத்திருக்க முயற்சிக்கும் வீடியோவை பயனர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பல கருத்துகளை குவித்து வருகிறது.
“தைவான் செவிலியர்கள் நிலநடுக்கத்தின் போது குழந்தைகளை பாதுகாக்கின்றனர். இன்று நான் இணையத்தில் பார்த்த மிகவும் அழகான வீடியோ இது. தைரியமான இந்த பெண்களுக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவிற்கான சில கருத்துகளை இங்கு காண்போம்.
- சூப்பர் ஹீரோஸ்.
- இஸ்ரேலியர்கள் இதைப் பார்த்து குழந்தைகளையும், மருத்துவமனைகளையும் எப்படி நேசிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.
- நம்பிக்கையோடு இருங்கள் தைவான்.
- மனிதம்..
என பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.