நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் தை அமாவாசை - சீர் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்!
நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் தை அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு யாகத்திற்கு இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சீர் எடுத்து வந்த நிகழ்வுகள் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக அமைந்ததாக மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை கிராமத்தில் அமைந்துள்ளது நல்வழிச் சித்தர் கோயில். இந்த் கோயிலில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு கோ பூஜை மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது.
இந்த யாகத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை எடுத்து வந்தனர். இந்த யாக நிகழ்விற்கு அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களும் ஒன்றாக கலந்து கொண்டது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
அதேபோல இந்த நிகழ்வில் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி மல்லிப்பட்டினம் ராமர் ஆலயத்துடன் கூடிய சேதுக் கடற்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து ராமர் ஆலயத்தில் மோட்ச தீபம் ஏற்றி அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பின் ராஜா மடம் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு பாத பூஜையும் மதிய அன்னதானமும் வழங்கப்பட்டது.