தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு
தை அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரம், தாமிரபரணி உள்ளிட்ட நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
அமாவாசை என்பது இயல்பாகவே காலம் கடந்த முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் ஆகும். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதை அமாவாசை திதி என்பர். ஆண்டு முழுவதும் வரும் 12 அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். இந்த நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் பல்வேறு
மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தங்களின் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். பின்பு கோயிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பின்னர் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் கரையோரங்களில் தர்பணம் செய்து புனித நீராடி வழிபட்டனர்.
அதேபோல் தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குற்றாலத்தில் அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். அருவியில் தண்ணீர் குறைவாக வருவதால் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். எள், அன்னம் கொண்டு வேத மந்திரங்கள் முழங்க ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.