பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தழுவி இந்தியில் உருவாகிறது "தடக் 2"
பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தழுவி இந்தியில் தடக் 2 என்கிற பெயரில் திரைப்படம் உருவாகி வருகிறது.
இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் படமாக உருவான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’ B.A.B.L. இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, இயக்குநர் மாரிமுத்து, பூ ராமு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் அனைவராலும் கொண்டாடப்பட்டு ஒரு புதிய விவாதத்திற்கு அழைத்துச் சென்றது.
பரியேறும் பெருமாள் படத்தில் ஆதிக்க சாதி சமூகத்தை சார்ந்த ஜோவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உள்ள பரியனும் நட்பாக பழகுகிறார்கள். அவர்களை ஆதிக்க சாதி சமூகம் எப்படி நடத்துகிறது, எப்படி ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குகிறது என்பதை மிக நேர்த்தியாக பொது சமூகத்தின் முன் காட்சிப்படுத்தியிருப்பார் மாரி செல்வராஜ்.
இப்படத்தின் மிக கிளாசிக்கான காட்சிகள் பல இடம்பெற்றுள்ளன. யோகி பாபுவின் நட்பு, வில்லன் தாத்தாவின் கொடூரமான காட்சிகள், ஜோ அப்பாவின் நிதானமான பேச்சு, செல்லப் பிராணியான கருப்பி, பரியனின் அப்பாவின் நடிப்பு, கல்லூரி முதல்வராக வரும் ’பூ’ ராமுவின் எதார்த்தமான மற்றும் ஆழமான பேச்சு என படம் முழுக்க தவிர்க்க முடியாத காட்சிகள் ஏராளமாக இடம்பெற்றன.
”நீங்க நீயாக இருக்கிற வரை நாங்கள்ளாம் நாயாக இருக்கனும்னு நீங்க நினைக்கிற வரை இங்க எதுவுமே மாறாது” என பரியன் சொல்லும் வசனமும், கிளைமாக்ஸ் காட்சி ஒரு தேயிலை நீர் மற்றும் ஒரு பால் டீ அடங்கிய இரண்டு டம்ளர்கள் என அப்படத்தில் சமூகத்தின் அவல நிலை மற்றும் சமூகத்தில் புரையோடி இருக்கிற சாதிய ஆணவத்தை பொட்டில் அறைந்தார்போல் பேசியிருப்பார் மாரி செல்வராஜ்.
பரியேறும் பெருமாள் திரைப்படம் உலக அளவில் பல திரைப்பட விழாக்கள் மற்றும் பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் ஷாஜியா இக்பால் இயக்கத்தில் சித்தார்த் சதுர்வேதி - த்ரிப்தி இம்ரி நடிப்பில் 'தடக் 2' திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது; இத்திரைப்படம் 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தை தழுவி உருவாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.