டி20 உலகக்கோப்பை : பப்புவா நியூ கினியாவை வீழ்த்தியது மேற்கு இந்திய தீவுகள் அணி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பப்புவா நியூ கினி அணிக்கு எதிரான போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நேற்று முதல் தொடங்கி வரும் 29ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் இந்திய நேரப்படி காலை 6 மணியளவில் அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கியது. இதில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கனடா 20 ஓவர்களின் முடிவில் 5விக்கெட்டுகள் இழப்பிற்கு 194ரன்கள் குவித்தது. இதன்மூலம் அமெரிக்காவிற்கு வெற்றி இலக்காக 195 ரன்களை நிர்ணயித்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்கா 17.4 ஓவர்களிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எளிமையாக எட்டி முதல் வெற்றியை தன்வசமாக்கியது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது போட்டி நேற்று இரவு 8 மணியளவில் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணியும், பப்புவா நியூ கினியா அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்களை விளாசினர். இதில், அதிகபட்சமாக சேசே பவு அரை சதம் குவித்தார். கிப்லின் தோரிகா 27 ரன்கள் அடித்தார்.
இதையும் படியுங்கள் : 'தயவுசெய்து மதியம் உணவு ஆர்டர் செய்ய வேண்டாம்' - வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்த Zomato!...
இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. கேப்டன் ரோவ்மன் பவல் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற்றினார். ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரோஸ்டன் சேஸ் 42 ரன்களும், ஆண்ட்ரே ரஸல் 15 ரன்களும் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 137 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.