டி20 உலகக் கோப்பை: இலங்கை - தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை!
உலகக் கோப்பை டி20 தொடரில் இன்று நடைபெற உள்ள 4வது லீக் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியும் மற்றும் இலங்கை அணியும் மோதுகின்றன.
20 அணிகள் பங்கேற்கும் 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நேற்று முதல் தொடங்கி வரும் 29ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் நேற்று இந்திய நேரப்படி காலை 6 மணியளவில் அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கியது. இதில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின. இதில், அமெரிக்கா 17.4 ஓவர்களிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எளிமையாக எட்டி முதல் வெற்றியை தன்வசமாக்கியது.
இரண்டாவது லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியும், பப்புவா நியூ கினியா அணியும் மோதின. இதில், 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 137 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இன்று காலை நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் ஓமன் அணியும் நமீபியா அணியும் மோதின. இந்த ஆட்டம் சமனில் முடிவடைந்த நிலையில், சூப்பர் ஓவரில் ஓமன் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா அணி அபார வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள் : தணிக்கை அதிகாரிகள் அனுமதி மறுப்பு - வடக்கன் படத்தின் பெயர் ரயில் என மாற்றம்!
டி20 உலகக் கோப்பை தொடரின் நான்காவது லீக் போட்டியில் ஒருமுறை சாம்பியனான இலங்கை அணியும், இரண்டு முறை அரையிறுதி வரை சென்ற தென்னாப்பிரிக்கா அணியும் இன்று மோதுகிறது. இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 8 மணி தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளும் தங்களின் முதல் போட்டியில் விளையாடுகின்றன.