டி20 உலகக்கோப்பை: மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை தொடரின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் சுற்று முடிவடைந்தது. மொத்தமாக 20 அணிகள் பங்குபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரில் தற்போது 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்சி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணி 2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மழை நின்றதையடுத்து நிறுத்தப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் மழை குறுக்கிட்டு போட்டி நேரம் தடைபட்டதால், இந்த ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 17 ஓவர்களில் 123 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
இதனையடுத்து தொடர்ந்து பேட்டிங் செய்த மார்க்ரம் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை அடுத்து களமிறங்கிய கிளாசென் 22 ரன்களில் வெளியேறினார். அதை தொடர்ந்து களமிறங்கிய மில்லர் 2 ரன்களில் அவுட் ஆனார். 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்க அணி 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சேஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.