டி20 உலகக் கோப்பை - மேற்கிந்திய தீவுகள் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் இன்று மோதல்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும், பப்புவா நியூ கினியா அணியும் இன்று மோதுகின்றன.
20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்றுமுதல் வரும் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. இத்தொடரின் பயிற்சி ஆட்டம் நேற்று அமெரிக்காவில் தொடங்கியது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதனையடுத்து இன்று இப்போட்டியின் முதல் ஆட்டம் இந்திய நேரப்படி காலை 6 மணியளவில் அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கியது. இதில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கனடா 20 ஓவர்களின் முடிவில் 5விக்கெட்டுகள் இழப்பிற்கு 194ரன்கள் குவித்தது. இதன்மூலம் அமெரிக்காவிற்கு வெற்றி இலக்காக 195 ரன்களை நிர்ணயித்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்கா 17.4 ஓவர்களிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எளிமையாக எட்டி முதல் வெற்றியை தன்வசமாக்கியது.
இதனையடுத்து இத்தொடரின் இரண்டாவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு பிராவிடன்ஸ் ஸ்டேடியம், கயானாவில் நடைபெற உள்ளது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணியும், பப்புவா நியூ கினியா அணியும் மோதுகின்றன.