டி20 உலகக் கோப்பை - நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி அபார வெற்றி!
டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - நமீபியா அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த வகையில், நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடர்ந்து களமிறங்கிய ஜேபி கோட்ஸே ரன் எதுவும் எடுக்காமலும், ஜான் ப்ரைலின்க் 12 ரன்களிலும், நிகோலாஸ் டேவின் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் சிறப்பாக ஆடி அரைசதமடித்து நிலையில் 52 ரன்களில் வெளியேறினார்.
இதனையடுத்து ஆடிய ஜேன் கிரீன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக 20 ஓவர்கள் முடிவில் நமீபியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து அணி சார்பில் பிராட் வீல் 3 விக்கெட்டும், பிராட்லி கியூரி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது.
தொடர்ந்து களமிறங்கிய ஜார்ஜ் முன்சி 7 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஆடிய மைக்கேல் ஜோன்ஸ் 26 ரன்களும், பிராண்டன் மெக்முல்லன் 19 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். இவர்களை அடுத்து ஆடிய ரிச்சி பெரிங்டன், மைக்கேல் லீஸ்க் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். ரிச்சி பெரிங்டன் 47 ரன்களும், மைக்கேல் லீஸ்க் 35 ரன்களும் எடுத்தனர். இதனால் ஸ்காட்லாந்து அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.