டி20 உலகக்கோப்பை: கனாடாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான்!
கனடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த கனடா அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஜான்சன் - நவ்னீத் தலிவால் களமிறங்கினர். இதில் நவ்னீத் 4 ரன்களில் போல்டானார். அடுத்து வந்த பர்கட் சிங் 2 ரன்களிலும், நிக்கோலஸ் கிர்டன் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர். நிலைத்து ஆடி அரைசதம் கடந்த ஆரோன் ஜான்சன் 52 ரன்னில் போல்டானார். கலீம் சனா 13 ரன்களிலும், தில்லன் ஹெய்லிகர் 9 ரன்களிலும் எடுத்து களத்தில் இருந்தனர்.
முடிவில் கனடா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர், ஹாரிஸ் ராப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சைம் அயூப் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அயூப் 6 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினார். பாபர் அசாம் 33 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய பக்கார் ஜமான் 4 ரன்னில் அவுட் ஆனார். நிலைத்து ஆடிய முகமது ரிஸ்வான் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 107 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கனடா தரப்பில் தில்லன் ஹெய்லிகர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பில் பாகிஸ்தான் அணி நீடிக்கிறது.