3.1 ஓவர்களிலேயே போட்டியை முடித்த இங்கிலாந்து - ஓமனை வீழ்த்தி அபாரம்!
டி20 உலகக்கோப்பையில் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆன்டிகுவாவில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற 28வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஓமன் அணிகள் மோதிக் கொண்டன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஓமன் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறினர். அந்த அணியில் அதிகபட்சமாக ஷோகைப் கான் (11 ரன்) மட்டும் இரட்டை இலக்கில் ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் ஓமன் அணி 13.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 47 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர், வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 12 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து இங்கிலாந்து அணி, 3.1 ஓவர்களில் இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி அடுத்த சுற்று வாய்ப்பை மேலும் வலுவாக்கியுள்ளது.