தூத்துக்குடியில் நிவாரணம் வழங்க சென்ற டி.ராஜேந்தர் - கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம்!
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சென்ற திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி. ராஜேந்தர் கூட்ட நெரிசல் காரணமாக மயக்கமடைந்தார்.
டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து தன்னார்வளர்களும், தொண்டு நிறுவனங்களும் தேவையான உதவிகளையும், நிவாரணங்களையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சிவந்தா குளம் பகுதியில்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிம்பு ரசிகர் மன்றம் மற்றும் டி.ராஜேந்தர் ரசிகர் மன்றம் சார்பாக நிவாரணம் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: புத்தாண்டு கொண்டாட்டம் – சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி!
இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு 5 கிலோ அரிசி பையினை டி. ராஜேந்தர் தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கினார். அப்பொழுது அளவுக்கதிகமான கூட்டத்தினாலும், காற்றோட்டம் குறைந்ததாலும் டி. ராஜேந்தர் லேசான தலைசுற்றலுடன் மயக்கம் அடைந்தார்.
அவரை தொண்டர்கள் சேரில் அமர வைத்து முகத்தில் தண்ணீர் தெளித்து விசிறியால் காற்று வீசி ஆசிவாசப்படுத்தினர். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த டி. ராஜேந்தர் பொதுமக்களுக்கு தொடர்ந்து நலத்திட்டங்களை வழங்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து மன்ற நிர்வாகிகள் அவரை பாதுகாப்புடன் காரில் அழைத்துச் சென்றனர்.